

சேலம் மாவட்ட எல்லைப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க எஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை நடந்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. விழுப்புரம் மாவட்ட எல்லையில் உள்ள கல்வராயன் மலை அமைந்துள்ளதால், கள்ளச்சாராய வியாபாரிகள் சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட காவல் துறையினரை ஏமாற்றி, கள்ளச்சாரயம் காய்ச்சி கடத்தி விற்பனை செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க சேலம் எஸ்பி தீபா காணிகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர், கல்வராயன் மலை, வாழப்பாடி, மேட்டூர், கொளத்தூர், கருமலைக்கூடல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுகிறதா என தனிப்படை போலீஸார் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தனிப்படை போலீஸார் எச்சரித்துள்ளனர்.