

தூத்துக்குடி ரோச் காலனி 5-வதுதெருவைச் சேர்ந்தவர் ஆஷா (30). இவர் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி இரவு 9.45 மணியளவில் தோழி சுமதி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி தெற்குகாட்டன் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர், ஆஷா கழுத்தில் அணிந்திருந்த 17 பவுன் தங்க நகையை பறித்துச் சென்றுவிட்டார். இதன் மதிப்பு சுமார் ரூ.6 லட்சம். தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். நகை பறித்தவரை பிடிக்க டிஎஸ்பி கணேஷ், ஆய்வாளர் ஆனந்த ராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை தனிப்படையினர் ஆய்வு செய்தனர். அப்போது விலை உயர்ந்த நவீன கேடிஎம் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர்,ஆஷா அணிந்திருந்த நகையை பறித்துச் சென்ற காட்சி பதிவாகியிருந்தது.
அந்த இளைஞர் வந்த மோட்டார்சைக்கிள் மாடல் கடந்த நவம்பர்மாதம் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.2.75 லட்சம் மதிப்புள்ள இந்த மோட்டார் சைக்கிள்கள் 18 மட்டுமே தூத்துக்குடியில் விற்பனையாகியிருந்தன. இந்த விவரங்களை கொண்டு விசாரித்ததில் நகை பறித்த இளைஞரை போலீஸார் எளிதில் கண்டுபிடித்தனர். தூத்துக்குடி அருகேயுள்ள முத்தையாபுரம் குமாரசாமி நகர் 5-வது தெருவைச் சேர்ந்த சுடலைமணி மகன் நயினார் (21) என்பவர் தான் ஆஷாவிடம் நகை பறித்தது என்பது தெரியவந்தது. நயினார் கைது செய்யப்பட்டு, நகை மீட்கப்பட்டது. நகையை அதன் உரிமையாளரான ஆஷாவிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நேற்று நேரில் ஒப்படைத்தார். மேலும், இந்த வழக்கில் குற்றவாளியை விரைவாக பிடித்து நகையை மீட்ட போலீஸாருக்கு ரொக்க பரிசு வழங்கி எஸ்பி பாராட்டினார்.