

மணப்பாடு அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு புதுக்குடி மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ் (எ) அல்போன்ஸ் லாரன்ஸ் (39). இவரது மனைவி சியாமளா (32). இவர்களுக்கு கடந்த 2006-ம்ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமாகி 8 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், லாரன்ஸ் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்துமனைவி சியாமளாவிடம் தகராறு செய்துள்ளார். மனவேதனையடைந்த சியாமளா கடந்த20.10.2014 அன்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலைக்கு தூண்டியதாக குலசேகரன்பட்டினம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, லாரன்ஸை கைது செய்தனர்.
வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை நீதிபதி பாண்டியராஜன் விசாரித்து, லாரன்ஸ்க்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர் சுபாஷினி ஆஜரானார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்து தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொண்ட அப்போதைய குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், அரசு வழக்கறிஞர் சுபாஷினி, தற்போதைய காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி மற்றும் காவலர் தங்கபாண்டி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பாராட்டினார்.