

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பயன்படுத்தப்படாத 1,733 வாக்குப்பதிவு கருவிகள் மீண்டும் குடோனில் வைத்து சீல் வைக்கப்பட்டது.
மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதி களிலும் வாக்குப்பதிவு எந்தவிதஅசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது.
இந்த தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான தூத்துக்குடிஅரசு பொறியியல் கல்லூரியில், சட்டப்பேரவை தொகுதிவாரியாக தனித்தனி வைப்பறைகளில் வைத்து பூட்டி சீல் வைக் கப்பட்டுள்ளது.
மேலும், சட்டப்பேரவை தேர்தல் பணியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் இருப்பாக (20 சதவீதம் கூடுதல்) வழங்கப்பட்டதில் 364 கட்டுப்பாட்டு கருவிகளும், 674 வாக்குப்பதிவு கருவிகளும், 489 விவிபாட் கருவிகளும் மீள் பெறப்பட்டுள்ளன. இக்கருவிகள் தவிர வேட்பாளர் விவரங்களை உள்ளீடு செய்யும்போதும், மாதிரி வாக்குப்பதிவின் போதும், வாக்குப்பதிவுக்கு முன்னரும் 54 கட்டுப்பாட்டு கருவிகளும், 31 வாக்குப்பதிவு கருவிகளும், 121 விவிபேட் கருவிகளும் பழுதடைந்துள்ளன.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி இந்த இருப்பு கருவிகள் மற்றும் பழுதடைந்த கருவிகள் என, மொத்தம் 1,733 கருவிகள் காவல்துறை பாதுகாப்புடன், புதுக்கோட்டையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள இயந்திர வைப்பறைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.