

பர்கூர் அதிமுக எம்எல்ஏ தாக்கப்பட்டதாக அளித்த புகாரில், திமுக ஒன்றிய செயலாளர் உட்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட எமக்கல் நத்தம் கிராமத்தில் வாக்குச்சாவடியில் அதிமுக முகவர்கள் வெளியேற்றப்பட்டதை அறிந்து, அங்கு சென்ற அதிமுக எம்எல்ஏராஜேந்திரனை, திமுகவினர் தாக்கியதாகவும் எம்எல்ஏவின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன், பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், பர்கூர் ஒன்றிய திமுக செயலாளர் கோவிந்தராசன் மற்றும் சிலர் தன்னை தாக்கி, கார் கண்ணாடிகளை உடைத்ததாக தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக, பர்கூர் காவல் ஆய்வாளர் முரளி மற்றும் போலீஸார் கோவிந்தராசன், அவரது தம்பி வெங்கடேசன், ரமேஷ் மற்றும் சிலர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.