

தேர்தல் வாக்குப்பதிவு அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை விடவேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று சேலத்தில் வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டதால், பரபரப்பாக இயங்கும் சாலைகள் வெறிச்சோடியது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுநடைபெற்றது. இதையொட்டி, அரசு மற்றும் தனியார் நிறுவனங் களில் பணி புரிவோருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப் பட்டது.
இதனால், வாக்குப்பதிவு நாளான நேற்று சேலம் மாநகராட்சிப் பகுதி, ஆத்தூர், எடப்பாடி, நரசிங்கபுரம் உள்ளிட்ட நகராட்சிப் பகுதி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும் கடைகள் மூடப்பட்டிருந்தன.
உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளும் மூடப் பட்டதால் மதிய உணவு கிடைக்காமலும், தேநீர் அருந்த முடியாமலும் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். இதனிடையே, அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் குறைந்த எண்ணிக்கையில் இயங்கின. இதனால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டன.
குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயங்கியதாலும், சொந்த ஊர்களில் வாக்களிக்க பலர் பணிபுரியும் ஊர்களில் இருந்து பேருந்துகள் சென்றதால் வழக்கத்தை விட பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது.