

சேலம் மாவட்டத்தில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இயந்திர பழுது காரணமாக சேலம் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் காத்திருந்து வாக்களித்தார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 4,280 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குச்சாவடி எண் 175 மற்றும் மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி எண் 265 மற்றும் 305-ல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதேபோல, ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குச்சாவடி எண் 198, 24 மற்றும் ஏற்காடு தொகுதியில் வாக்குச்சாவடி எண் 224 ஆகிய வாக்குச்சாவடி மையங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டது.
இதையடுத்து, தொழில் நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு பழுது சீர் செய்யப்பட்டது. இதனால், இந்த வாக்குச்சாவடி களில் காலை 8.30 மணிக்கு மேல் வாக்குப்பதிவு தொடங்கியது.
இதனிடையில், சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் ராமலிங்க வள்ளலார் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி எண் 228-ல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்ற நிலையில் 9 மணிக்கு மேல் இயந்திரத்தில் திடீரென பழுது ஏற்பட்டது.
இந்த நேரத்தில் சேலம் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கடாஜலம், வாக்களிக்க அந்த மையத்தில் மக்களுடன் வரிசையில் காத்திருந்தார். வாக்குப்பதிவு இயந்திர பழுது அரை மணி நேரத்துக்கு பின்னர் சீரானது. இதை தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால், அரை மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து சேலம் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கடாஜலம் வாக்களித்தார்.