ஈரோட்டில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் - கரோனா தடுப்பு உபகரணங்களுடன் வாக்குச்சாவடிகள் தயார் : பதற்றமான இடங்களில் கேமரா பொருத்தி கண்காணிப்பு

ஈரோட்டில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் -  கரோனா தடுப்பு உபகரணங்களுடன் வாக்குச்சாவடிகள் தயார்  :  பதற்றமான இடங்களில் கேமரா பொருத்தி கண்காணிப்பு
Updated on
1 min read

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2741 வாக்குச் சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் வெப்பநிலை பரிசோதனை கருவி, கையுறை உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும்1390 வெப் கேமரா கண்காணிப்பு களுடன் போதிய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2741 வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. அதனை ஆய்வு செய்த மாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 9 லட்சத்து 56 ஆயிரத்து 539 ஆண் வாக்காளர்கள், 10 லட்சத்து 6 ஆயிரத்து 662 பெண் வாக்காளர்கள், 110 இதர வாக்காளர்கள் என மொத்தம் 19 லட்சத்து 63 ஆயிரத்து 311 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 128 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் 926 இடங்களில் 2215 வாக்குச்சாவடிமையங்கள், 526 துணை வாக்குச் சாவடி மையங்கள் என மொத்தம் 2741 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 304 பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு 335 தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில், 1390 வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு வருகிறது.

வாக்குப்பதிவிற்காக 3264 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களும், வாக்காளர்கள் தங்கள் அளித்த வாக்கினை உறுதி செய்யும் 3592 விவிபாட் இயந்திரங்களும் பயன்படுத்தப்படவுள்ளன. 13 ஆயிரத்து 156 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர்.

வாக்குச்சாவடிகளில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் 2741 தெர்மல் ஸ்கேனர் கருவிகள், முகக்கவசங்கள், கிருமிநாசினி பாட்டில்கள், 19 லட்சத்து 63 ஆயிரத்து 311 பாலித்தீன் கையுறைகள், கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்கள் பாதுகாப்பாக வாக்களிக்க 35 ஆயிரத்து 633 முழு கவச உடைகள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, தேர்தல் நடத்தும் அலுவலர் சி.சைபுதீன் (ஈரோடு மேற்கு), பா.ஜெயராணி (மொடக்குறிச்சி), இலாஹிஜான் (பெருந்துறை), வாணிலெட்சுமி ஜெகதாம்மாள் (பவானி) மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படுவதை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in