

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங் களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்களில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (6-ம் தேதி) நடைபெறுகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் உள்ள 4,280 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச் சாவடிகளுக்கு தேவை யான பொருட்கள் உள்ளிட்டவைகள் அந்தந்த தொகுதியில் உள்ள பாதுகாப்பு அறைகளில் இருந்து, மண்டல அலுவலர்கள் மூலம் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
11 தொகுதிகளில் உள்ள 360 மண்டலங்களில் இருந்து ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட ஒரு வாகனத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மேலும் கரோனா தடுப்பு உபகரணங்கள் ஒரு வாகனம், மண்டல தேர்தல் அலுவலர்கள் ஒரு வாகனம் என ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் தலா 3 வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
சேலம் வீரபாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு தேவை யான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவைகள் பெரிய சீரகாபாடி தனியார் பொறி யியல் கல்லூரி பாதுகாப்பு அறையில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி நடந்தது. இப்பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறும்போது, “வாக்குச் சாவடிகளுக்குத் தேவை யான பொருட்களை எடுத்துச் செல்லும் மண்டல அலுவலர்கள் அந்தந்த வாக்குச்சாவடி பொறுப்பு அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றார்.
ஆய்வின்போது, மேட்டூர் மற்றும் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பொது பார்வையாளர் தினேஷ் பிரசாத், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சரவணன் (மேட்டூர்), பண்டரிநாதன்( வீரபாண்டி), வேடியப்பன்(சங்ககிரி), சத்திய பால கங்காதரன்(சேலம் மேற்கு) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.