

நீலகிரி மாவட்டம் உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் மு.போஜராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக, கர்நாடக மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் சோமசேகர் தலைமையில், குண்டல்பேட் சட்டப்பேரவை உறுப்பினர் நிரஞ்சன்குமார் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.
அதன்பின்பு உதகையில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த பாஜக வேட்பாளர் மு.போஜராஜன் கூறும்போது, ‘‘நான் வெற்றி பெற்றால் உதகையை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன். சுற்றுலாவை மேம்படுத்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவேன். ஹெச்பிஎஃப் தொழிற்சாலையில் ஐடி நிறுவனம் ஏற்படுத்துவேன்’’ என்றார்.
கர்நாடக கூட்டுறவுத்துறை அமைச்சர் சோமசேகர் கூறும்போது, ‘‘உதகையில் வசிக்கும் கர்நாடக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பந்திப்பூர் சாலையில் இரவுநேரப் போக்குவரத்து பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நிலம்பூர்-நஞ்சன்கூடு ரயில் பாதை அமைக்க பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.