

தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் ராதாரவி ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இவர் தனது தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த 1-ம் தேதி தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட ராம் நகர், ராமர் கோயில் பகுதியில் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவருடன் ராமர் மற்றும் அம்மன் கடவுள் வேடம் போட்ட நாடகக் கலைஞர்களை அழைத்து வந்து அவர்களை சுட்டிக்காட்டி பேசியபடி, கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார்.
நாடக நடிகர்கள்
இதுதொடர்பாக கோவை தெற்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும், தெலுங்கு வீதியைச் சேர்ந்த பழனிகுமார் என்பவர் காட்டூர் போலீஸில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதில்,‘ கடவுள் வேடங்களைப் போட்ட நாடக நடிகர்களைக் கொண்டு கமல்ஹாசன் பிரச்சாரம் செய்துள்ளார். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் மற்றும் 2 பேர்
இதுதொடர்பாக, காட்டூர் போலீஸார் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ், மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல், கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக, அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளர் ராதாரவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரச்சாரம் மேற்கொண்டார். கெம்பட்டி காலனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கோவை தெற்கு தொகுதியில் மநீம கட்சியின் சார்பில் போட்டியிடும், கமல்ஹாசன் குறித்து அவதூறாக ராதாரவி பேசியதாக புகார்கள் எழுந்தன.
ராதாரவி மீது வழக்கு
இந்த விவகாரம் தொடர்பாக, கோவை தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்பிரமணியன், ரேஸ்கோர்ஸ் போலீஸில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். ரேஸ்கோர்ஸ் போலீஸார் ராதாரவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.