சாலையில் திடீரென வாகனங்களை நிறுத்தும் பறக்கும் படையினர் : விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு

சாலையில் திடீரென வாகனங்களை நிறுத்தும் பறக்கும் படையினர் :  விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு
Updated on
1 min read

கோபி அருகே தேர்தலையொட்டி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர், வாகனங்களை திடீரென நிறுத்தியதால், ஏற்பட்ட விபத்தில் இரு பெண்கள் காயமடைந்தனர்.

ஈரோடு- கோபி சாலையில் வெள்ளாளபாளையம் பிரிவு அருகே தேர்தல் பறக்கும் படையினர், வாகனத் தணிக்கை யில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கோபியில் இருந்து கவுந்தப்பாடி நோக்கி வந்த காரை நிறுத்துமாறு பறக்கும் படையினர் சைகை செய்தனர். திடீரென வாகனத்தை நிறுத்தச் சொன்னதால், வாகன ஓட்டுநர் வேகத்தைக் குறைத்துள்ளார். அப்போது, இந்த காரைத் தொடர்ந்து வந்த மற்றொரு கார் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பின்னால் வந்த வாகனத்தில் பயணித்த இரண்டு பெண்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. வாகனமும் பலத்த சேதம் அடைந்தது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இரு பெண்களையும் கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கார் ஓட்டுநர் வாகனத் தணிக்கையில் ஈடு பட்டிருந்த அதிகாரி மற்றும் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

திடீரென்று காவலர் கைகளைக் காட்டி வாகனத்தை நிறுத்தியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்திற்கு காரணம் காவல் துறையினரின் பொறுப்பற்ற செயல் என அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாகன ஓட்டிகள் கூறும்போது, பகல் நேரங்களில் வெயில் காரணமாக மரத்தின் நிழலில் இருக்கும் பறக்கும் படையினர் திடீரென வந்து வாகனத்தை நிறுத்துமாறு கூறுகின்றனர். இதனால், வாகனங்கள் விபத்துக் குள்ளாகின்றன.

அதேபோல், சோதனைச்சாவடி அமைக்கும் பகுதிகளில் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி பரிசோதிக்கும் அளவுக்கு இட வசதி உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். குறுகலான பகுதிகளில் சாலையிலேயே வாகனத்தை நிறுத்தி சோதனை செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in