

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளை (ஏப்.6) நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் மொத்தம் 120 பேர் போட்டியிடுகின்றனர். இதில் அதிகபட்சமாக தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி தொகுதிகளில் தலா 26 பேர் களத்தில் உள்ளனர்.
14,87,782 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 18 முதல் 19 வயதுடைய முதல் முறை வாக்காளர்கள் 36,173 பேர். 20 முதல் 29 வயதுவரை 3,02,636 பேர், 30 முதல் 39 வயது வரை 3,27,137 பேர், 40 முதல் 49 வயது வரை 3,09,908 பேர், 50 முதல் 59 வயது வரை 2,41,086 பேர், 60 முதல் 69 வயது வரை 1,55,402 பேர், 70 முதல் 79 வயது வரை 85,923 பேர் மற்றும் 80 வயதுக்கு மேல் 29,517 பேர் உள்ளனர்.
தூத்துக்குடியில் 405, திருச்செந் தூரில் 339, விளாத்திகுளத்தில் 312, வைகுண்டத்தில் 317, ஓட்டப்பிடாரத்தில் 349, கோவில்பட்டியில் 375 என, 6 தொகுதிகளிலும் மொத்தம் 2,097 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. இவைகளில் 302 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, 5 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்ற மானவை என கண்டறியப் பட்டுள்ளன.
20 ஆயிரம் பணியாளர்கள்
மேலும், வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தல், முகக்கவசம், சானிடைஸர், கையுறை வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ள 4,194 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவு பொருட்களை வாக்குச்சாவடி களுக்கு எடுத்துச் செல்லவும், வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரவும் 158 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 3 போலீஸார் உள்ளிட்ட 6 பேர் என, மொத்தம் 984 பேர் இடம் பெற்றுள்ளனர்.
மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் உள்ளூர் போலீஸார் 2,130 பேர், தீயணைப்பு படையினர் 31 பேர், ஊர்க்காவல் படையினர் 298 பேர், முன்னாள் படைவீரர்கள் 208 பேர், முன்னாள் காவல் துறையினர் 82 பேர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 148 பேர் மற்றும் 10 கம்பெனி துணை ராணுவ படை வீரர்கள் 744 பேர் என, மொத்தம் 3,641 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
வெப் கேமராக்கள்
6 தொகுதிகளிலும் 1050 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முழுவதும் வெப் கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவுக்கு தேவையான அழியா மை, பேனா, பென்சில் உள்ளிட்ட 109 வகையான பொருட்கள், 9 வகையான கரோனா பாதுகாப்பு பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் அந்தந்த தொகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தயார் நிலையில் வாகனங்கள்
அனைத்து வாக்குச்சாவடி களிலும் நாளை (ஏப்.6) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவை தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.