திருவண்ணாமலை அருகே - கவுத்தி மலையில் ஏற்பட்ட தீயால் 60 ஏக்கர் வனப்பகுதி சேதம் : தீயை கட்டுக்குள் கொண்டுவர 8 மணி நேர போராட்டம்

திருவண்ணாமலை அருகே  -  கவுத்தி மலையில் ஏற்பட்ட தீயால் 60 ஏக்கர் வனப்பகுதி சேதம் :  தீயை கட்டுக்குள் கொண்டுவர 8 மணி நேர போராட்டம்
Updated on
1 min read

திருவண்ணாமலை அருகே கவுத்தி மலையில் ஏற்பட்ட தீயால் 60 ஏக்கர் பரப்பளவு வனப்பகுதி சேதமடைந்துள்ளது.

திருவண்ணாமலை அருகே கவுத்தி மலை – வேடியப்பன் மலை உள்ளது. பல நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மலையில் மூலிகைகள் அதிகம் உள்ளன. அறிய வகை உயிரினங்களும் வாழ்கின்றன. இந்த மலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. பின்னர், வனத்துறை முயற்சியால் தீ அணைக்கப் பட்டது.

இந்நிலையில், கவுத்தி மலை பகுதியில் நேற்று முன்தினம் மாலை மீண்டும் தீ பிடித்தது. வெயில் தாக்கம் இருந்ததால், தீயின் வேகம் அதிகரித்து மரங்களில் பற்றிய தீ, மளமளவென மலை உச்சி வரை பரவியது. சுமார் 30 அடி உயரத்துக்கு தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

இதையறிந்த வனத்துறையினர் மற்றும் ரேகன்போக் அமைப்பினர் சுமார் 20 பேர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மலைப் பகுதியில் இருந்த மரக்கிளைகளை வெட்டி, பின்னர் அதன் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கடுமையான போராட்டத்துக்கு பிறகு நேற்று அதிகாலை 2 மணியளவில் தீயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதில், சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் உள்ள வனப்பகுதி எரிந்து சேதமானது. பல்வேறு உயிரினங்களும் உயிரிழந்துள்ளன.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, “இயற்கையால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வில்லை. மனித செயல்கள் மூலமே தீப்பற்றி எரிந்துள்ளது. மலையடிவாரத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெற்றுள்ளன. அதில் ஈடுபட்டவர்கள் மூலமாக தீப்பற்றி எரிந்துள்ளது. கவுத்தி மலையில் வெளியாட்கள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால்,கிராம மக்கள் வனத்துறையின ருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதனால், மலையையும் அதில் வளர்ந்து வரும் மரங் களையும், வாழ்ந்து வரும் உயிரினங்களையும் பாதுகாக்கலாம்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in