

தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் கி.செந்தில்ராஜ் அறிக்கை: வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்னர், அதாவது இன்று (4-ம் தேதி) மாலை 7 மணி முதல் தேர்தல் நாளான ஏப்.6-ம் தேதி மாலை 7 மணி வரை அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, தேர்தல் தொடர்புடைய பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த கூடாது. தேர்தல் தொடர்புடைய நிகழ்வுகளை சினிமா, தொலைக்காட்சி போன்றவற்றில் ஒளிபரப்பக்கூடாது. சமூக வலைதளங்களிலும் பிரச்சாரம் கூடாது. தேர்தல் ஆணைய கட்டுப்பாடுகளை மீறும்பட்சத்தில் 2 வருட சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கக்கூடும்.
தேர்தல் பணிகளுக்காக அரசியல் கட்சியினர், நிர்வாகிகள் வேறு தொகுதியிலிருந்து வந்திருந்தால், தொகுதியைவிட்டு இன்று (4-ம்தேதி) மாலை 7 மணிக்கு பின்னர்உடனடியாக வெளியேற வேண்டும். வேட்பாளர்கள் இதுவரை பெற்ற வாகன அனுமதி அனைத்தும் இன்று மாலை 7 மணியோடு முடிவடைந்து விடும்.தேர்தல் நாளன்று வேட்பாளர்கள் தனது சொந்த உபயோகத்துக்கும், தனது தேர்தல்முகவரின் உபயோகத்துக்கும், தனது கட்சி உறுப்பினர்களுக்கும் என, மூன்று வாகனத்துக்கு மட்டும் தனித் தனியாக வாகன அனுமதி பெற வேண்டும். வேட்பாளர்கள் வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் தற்காலிக பிரச்சார அலுவலகம் அமைக்கலாம். இதில் 2 நபர்கள் மட்டும் பணியாற்ற வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.