மோடி ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் - திமுக கூட்டணியின் வெற்றி சதவீதம் கூடுகிறது : திருமாவளவன் கருத்து

மோடி ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும்  -  திமுக கூட்டணியின்  வெற்றி சதவீதம் கூடுகிறது :  திருமாவளவன் கருத்து
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூரில் குன்னம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு ஆதரவாக நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வாக்கு சேகரித்துப் பேசியது:

மோடியும், அமித்ஷாவும் தமிழகத்தை குறி வைத்துள்ளனர். தமிழகத்தின் பெயரை தட்சிண பிரதேஷ் என மாற்றுவதற்கும், நமது அடுத்த சந்ததியினர் இந்தி பேச வேண்டும் எனவும் மத்திய அரசு முயற்சிக்கிறது.

பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் திமுக கூட்டணியின் வெற்றி சத வீதம் கூடுகிறது.

தேர்தலுக்குப் பிறகு அதிமுக இருக்காது. அதிமுக நிர்வாகிகளை பாஜக விலைக்கு வாங்கி அக்கட்சியை அழித்துவிடும். விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியால் திமுக வெற்றி பெற்றது என வரலாறு அமையும் வகையில் விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் என்றார்.

பிரச்சாரத்தின்போது, திமுக மாவட்டச் செயலாளர் சி. ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் சி. தமிழ்மாணிக்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர், அரியலூர் தொகுதி மதிமுக வேட்பாளர் கு.சின்னப்பாவை ஆதரித்து அண்ணா சிலை அருகே திருமாவளவன் பேசியது:

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லை என்பதால், தமிழகத்தில் எப்படியாவது காலூன்றி விடலாம், திமுகவுக்கு அடுத்த 2-வது பெரிய கட்சியாக வளர்ந்து விடலாம் என பாஜக நினைக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியோடு மோதக் கூட பாஜகவுக்கு தகுதியில்லை என்றார்.

தொடர்ந்து, ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளர் க.சொ.க.கண்ணனை ஆதரித்து உடையார்பாளையத்தில் வாக்கு சேகரித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in