

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு சுழற்சி முறையில் வாக்குச்சாவடிகள் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 2,097 வாக்குச்சாவடிகளில், 10,064 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்கள் பணிபுரியும் வாக்குச்சாவடி ஒதுக்கீடு செய்யும் பணி ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது. தேர்தல் பொது பார்வையாளர்கள் ஜுஜவரப்பு பாலாஜி, அஸ்வானி குமார் சவுதாரி, சுஷில் குமார் படேல்,சவின் பன்சால், அனில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர்- நிலை 1, வாக்குச்சாவடி அலுவலர் -நிலை 2, வாக்குச்சாவடி அலுவலர் - நிலை 3 ஆகிய நிலைகளில் 8,388 பேரும், 20 சதவீத கூடுதல் பணியாளர்கள் 1,676 பேரும் என 10,064 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 2,097 வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள காவல்துறையினருக்கும் சுழற்சி முறையில் வாக்குச்சாவடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான உத்தரவுகள் தொடர்புடைய அலுவலர்களுக்கு உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், தேசிய தகவல் மைய அலுவலர் சரவணன், தேர்தல் வட்டாட்சியர் ரகு மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.