

திருப்பூர் மாநகரம் மற்றும் ஊரகப்பகுதிகளிலுள்ள வாக்குச்சாவடியில் பணியில் ஈடுபடவுள்ள 1087 போலீஸாருக்கு கணினி மூலமாக நேற்று பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு கணினி மூலமாக ஒதுக்கீடு செய்யும் பணி, திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான க. விஜயகார்த்திகேயன் தலைமையில் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
திருப்பூர் மாநகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் தேர்தல் பாதுகாப்புப் பணிகள் குறித்து மாநகரக் காவல் ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் ஆகியோர் பொது பார்வையாளர்களுக்கு விளக்கினர். மாநகர போலீஸார் 301 பேர், ஊரக பகுதி போலீஸார் 786 என 1087 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பணி நியமனம் செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸார், தவறாமல் முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டுமென மாவட்டதேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி, தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
உதகை
உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை,கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதிதேர்தல் பொதுப் பார்வையாளர்ராகுல் திவாரி, காவல்துறை பார்வையாளர் ரஞ்சித்குமார்மிஸ்ரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 868 வாக்குச் சாவடிகளில் 112 பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறியப்பட்டுள்ளன. ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குச்சாவடி அலுவலர்கள் என்ற விகிதத்தில் 3,472 அலுவலர்கள், கூடுதலாக 20 சதவீதம் என 696 வாக்குச்சாவடி அலுவலர்களுமாக மொத்தம் 4,168 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் வெப் ஸ்டிரீமிங், நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும்.
868 வாக்குச்சாவடிகளில் 50 சதவீத வாக்குச்சாவடிகளில் வெப் ஸ்டிரீமிங், மத்திய பாதுகாப்புப் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். காவல் துறையினர், நுண்பார்வையாளர்களை சுழற்சி முறையில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றுள்ளது. இதில் சுழற்சி முறையில் 400 காவல் துறையினர், 112 நுண் பார்வையாளா்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.