

காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உடுமலை சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளரான வழக்கறிஞர் தென்னரசை ஆதரித்து, தொகுதிக்கு உட்பட்ட பெதப்பம்பட்டி நான்கு சாலை சந்திப்பில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசும்போது, "இன்றைக்கு நாடு முழுவதும்காங்கிரஸ் கட்சியில் ஏராளமானபெண்கள் முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தலைவியாகவும், பிரதமராகவும் இந்திராகாந்தி இருந்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக சோனியா இருந்தார். பிரதீபா பாட்டீலை நாட்டின் குடியரசுதலைவராக்கியது காங்கிரஸ்.
இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சி இப்படியொரு வாய்ப்புகளை பெண்களுக்கு வழங்கியுள்ளதா? ஆர்.எஸ்.எஸ்.-ல் பெண்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதா? பாஜகவில் முக்கியப் பொறுப்புகள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா?. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கியுள்ளது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி நடவடிக்கைகளால் தொழில்கள் அழிந்துவிட்டன. இவற்றை களைய, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்- திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்" என்றார்.