

உளுந்தூர்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளராக தற்போ தைய எம்எல்ஏ குமரகுருவும், திமுக வேட்பாளராக திமுக மாவட்டப் பொறுப்புக் குழுத் தலைவர் ஏ.ஜே.மணிக்கண்ணனும் போட்டி யிடுகின்றனர்.
இந்த நிலையில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கூட்டணியில் உள்ள மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர், அதிமுக குறித்தும் அதிமுக வேட்பாளர் குறித்தும் அவதூறாக பேசியதாக, அதிமுக நகர செயலாளர் துரை தலைமையில் நேற்று உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதையறிந்த திமுகவினர், திமுக ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் தலைமையில் காவல் நிலையத்தில் திரண்டனர். அதிமுக வேட்பாளர் குமரகுரு, அவரது மகன் நமச்சிவாயம் உள்ளிட்ட 25 பேர் அவதூறாக பேசியதாக புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் அங்கு வந்த உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜயக்குமார், திமுகவினரை கலைந்து போகுமாறு கூறியுள்ளார். இதனால் திமுகவினருக்கும், டிஎஸ்பி விஜயக்குமாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதையடுத்து திமுக ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், அதிமுக வேட்பாளருக்கு சாதகமாக செயல்படும் டிஎஸ்பியை மாற்றக் கோரி, உளுந்தூர்பேட்டை தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணனிடம் மனு அளித்துள்ளார்.