

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வரும் 5-ம் தேதி உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 6-ம் தேதி நடைபெறுகிறது. கரோனா காலத்தில் தேர்தல் நடைபெறுவதால், பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த தேவையான முகக் கவசங்கள், சானிடைஸர், தெர்மல் ஸ்கேனர், கையுறை உள்ளிட்ட பொருட்கள் தொகுதி வாரியாக ஏற்கெனவே பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.
இதேபோல் அனைத்து வாக்குச்சாவடிகளையும் வாக்குப்பதிவுக்கு முன்பாக கிருமி நாசினி தெளித்துசுத்தம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 2,097 வாக்குச்சாவடிகளும் வரும் 5-ம்தேதி அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படவுள்ளன.
கிருமி நாசினி மருந்து தெளிப்பதற்காக ஒரு வாக்குச்சாவடிக்கு ரூ.150 வீதம் தேர்தல் ஆணையம் நிதி ஒதுக்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 2,097 வாக்குச்சாவடிகளுக்கான நிதி தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியரின் வங்கி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் தங்கள்பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் முழுமையாக கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்துவிட்டு, விவரங்களை உரிய ரசீதுடன் சமர்பித்தால் உடனடியாக அவர்களுக்கான நிதி விடுவிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.