

தஞ்சாவூரில் மேலும் ஒரு பள்ளியில் 2 ஆசிரியைகளுக்கும், 8 மாணவிகளுக்கும் கரோனா தொற்று நேற்று உறுதியாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அதிகளவில் கரோனா தொற்று பரவியுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட அனைவ ரும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 16 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உட்பட 222 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 203 பேர் குணமடைந்து, வீடு திரும்பிவிட்டனர். அதேபோல, 6 கல்லூரிகளில் மாணவர்கள், பேராசிரியர்கள் உட்பட 62 பேர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில், 44 பேர் குணமடைந்து, வீடு திரும்பிவிட்டனர்.
இந்நிலையில், புதிதாக நேற்று தஞ்சாவூரில் புதுக்கோட்டை சாலையில் உள்ள அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 8 மாணவிகளுக்கும், 2 ஆசிரியைகளுக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் சேர்த்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 113 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில் 126 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது, மாவட்டத்தில் 569 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.