

சேலம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் மாநகர மற்றும் மாவட்ட போலீஸார், ஊர்க்காவல் படையினர் கொண்டலாம்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு வாக்களிப்பு மையத்தில் தபால் வாக்குகளை அளித்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சேலம் மாவட்ட மற்றும் மாநகர போலீஸார், ஊர்க் காவல் படையினர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். இப்பணியில் ஈடுபடுவோர் தபாலில் வாக்கு செலுத்த வசதியாக, ஏற்கெனவே தபால் வாக்குப் படிவங்கள் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், சேலம் மாநகர காவல் துறை சார்பில் 1,770 காவல்துறை அலுவலர்கள், பணியாளர்களும், சேலம் மாவட்ட காவல் துறை சார்பில் 2,087 காவல்துறை அலுவலர்கள், பணியாளர்களும் என மொத்தம் 3,857 பேர், தபால் வாக்குகளை செலுத்த வசதியாக, சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று சிறப்பு வாக்களிப்பு மையம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்தமையத்தில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள போலீஸார், ஊர்க் காவல் படையினர் தங்கள் தபால் வாக்கை செலுத்தினர். சிறப்பு மையத்தை, மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன், மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார், எஸ்பி தீபா காணிகர் ஆகியோர் ஆய்வு செய்தனர். சிறப்பு வாக்களிப்பு மையத்தில் இன்றும் (2-ம் தேதி) தபால் வாக்கை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பணியாளர்கள்
இதனிடையே, தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள 18,331 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், பணியாளர்கள் தபால் வாக்குகள் செலுத்த, இவர்களுக்கு ஏற்கெனவே நடைபெற்ற முதல்கட்ட பயிற்சி வகுப்புகளில் உரிய படிவங்கள் வழங்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து, கடந்த 27-ம் தேதி நடைபெற்ற 2-ம் கட்ட பயிற்சி முகாமின்போது, முகாம் நடைபெற்ற இடத்தில் சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக தபால் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டு, தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், பணியாளர்கள் 12,629 பேர் தபால் வாக்குப்பதிவு செய்தனர். விடுபட்டவர்கள் மூன்றாம் கட்ட பயிற்சி முகாமின்போது தங்களது தபால் வாக்குகளை செலுத்த தேர்தல் ஆணையத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.