

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத் தில் மொத்தமுள்ள 2,097 வாக்குச் சாவடிகளில், 1050 வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்படுகிறது. இந்த பணிகள் முழுவதும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு, வெப் கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெறுகின்றன.
வெப் கேமரா மூலம் வாக்குச் சாவடியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர் தங்கள் அறைகளில் இருந்தே நேரடியாக பார்க்க முடியும்.
வெப் கேமராக்களின் செயல்பாடுகளில் பிரச்சினை ஏற்பட்டால் சரிசெய்ய தனியார் நிறுவனம் சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் 2,097 வாக்குச்சாவடிகளுக்கும் 158 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை வாக்குச் சாவடிக்குகொண்டு செல்லுதல், வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு சேர்த்தல் ஆகியவை இந்த மண்டல குழுக்களின் பணியாகும்.
மண்டல குழுக்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் வகையில் மண்டல அலுவலர்களின் வாகனம் மற்றும் வாக்குப்பதிவு பொருட்களை கொண்டு செல்லும் வாகனம் ஆகியவற்றில் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 158 மண்டல அலுவலர்களின் வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.