

சட்டப்பேரவைத் தேர்தலில் விவசாயிகள் அனைவரும் தவறாமல் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் காவேரி, செயலாளர் சப்பங்கிராமரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஜெயவேல் வரவேற்றார்.
கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் கிருஷ்ணன், மாநில பிரச்சார குழுத் தலைவர் விஜய்காந்த், மாநில சட்ட ஆலோசகர் சதாசிவன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், ‘சட்டப்பேரவைத் தேர்தலில் விவசாயிகள் தவறாமல் வாக்கை பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக வாக்களிக்க பணம் பெறாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட, ஒன்றிய கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொதுச் செயலாளர் அண்ணாமலை நன்றி கூறினார்.