

சேலம் அருகே சொத்து தகராறில் விவசாயியைக் கொலை செய்த சித்தி, சகோதரர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ள சின்னகல்வராயன் மலை அத்திமரத்துவளவு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது முதல் மனைவி உண்ணாமலை. இவர்களுக்கு சின்னதம்பி (41), ராஜேந்திரன் இரு மகன்கள் உள்ளனர். அண்ணாமலையின் இரண்டாவது மனைவி சின்னம்மாள். இவர்களுக்கு முனியப்பன், பூபாலன் என இரு மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான 85 சென்ட் நிலத்தை பிரித்துக் கொள்வதில் சின்னதம்பிக்கும், சித்தி குடும்பத்தினருக்கும் கடந்த ஆறு மாதமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று வெள்ளிக்காட்டு வளவு பகுதியில் சின்னதம்பி வெட்டு காயங்களுடன் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். தகவலறிந்த கருமந்துறை போலீஸார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சொத்து தகராறில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி விட்டு வீடு திரும்பிய சின்னதம்பியை, சித்தி சின்னம்மாள், அவரது இரண்டு மகன்கள் தகராறு செய்து அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கருமந்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சின்னம்மாள், முனியப்பன், பூபாலன் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.