

மக்களுக்கு தடையற்ற மின்சாரம் கிடைத்திட அதிமுக ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் எனக்கூறி தூத்துக்குடி தொகுதி தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் வாக்கு சேகரித்தார்.
தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் அவர், நேற்று காலை சண்முகபுரம் தூய பேதுரு ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் சென்ற மக்களிடம் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து வ.உ.சி. மார்க்கெட் பகுதிக்கு சென்று வியாபாரிகளையும், அங்கு வந்த பொதுமக்களையும் சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவரை வ.உ.சி. மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்கத் தலைவர் அசோகன், செயலாளர் பழனிவேல் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து மாலையில் புதுத்தெரு, லயன்ஸ் டவுன், பாத்திமாநகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாகச் சென்று அவர் வாக்கு சேகரித்தார். லயன்ஸ் டவுன் பகுதியில் உள்ள தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான மாணவி ஸ்னோலின் வீட்டுக்கு சென்று, அவரது உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். பிரச்சாரத் தில் அவர் பேசியதாவது:
மக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைத்திட தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி தொடர்ந்திட வேண்டும். அதற்கு தூத்துக்குடி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
அதிமுக ஆட்சி தொடரும் போது, அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக வாஷிங் மிஷின் வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். மீனவர்களின் நலனை பாதுகாக்க தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றார்.
பிரச்சாரத்தில் அதிமுக சார்பில் தெற்கு மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் அமிர்த கணேசன், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜோதிமணி, பாஜக சார்பில் ராமநாதன், தமாகா சார்பில் வடக்கு மாவட்டத் தலைவர் கதிர்வேல், மாநகரத் தலைவர் ரவிக்குமார், பாமக மத்திய மாவட்டச் செயலாளர் சின்னதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.