நாகரசம்பட்டி பகுதியில் - கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கம் அதிகரிப்பு :

நாகரசம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட என்.தட்டக்கல் பூசாரிகொட்டாய் கிராமத்தில் கோமாரி நோயால் தாக்கப்பட்ட பசு மாடுகள்.
நாகரசம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட என்.தட்டக்கல் பூசாரிகொட்டாய் கிராமத்தில் கோமாரி நோயால் தாக்கப்பட்ட பசு மாடுகள்.
Updated on
1 min read

நாகரசம்பட்டி பகுதியில் கால் நடை களுக்கு கோமாரி நோய் தாக்கம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் நாகரசம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கம்புகாலப்பட்டி, செல்லம்பட்டி, காட்டுக்கொல்லை, நாகரசம்பட்டி, வால்பாறை, வீரமலை, மல்லிக்கல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக கால்நடைகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றன. கம்புகாலப்பட்டியில் 6 பசு மாடுகளும், காட்டுக்கொல்லை கிராமத்தில் 3 மாடுகளும், பூஜாரிகொட்டாய் பகுதியில் ஒரு மாடு என 10-க்கும் மேற்பட்ட மாடுகள் கோமாரி நோயால் இறந்துள்ளன என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக கேஆர்பி அணை இடதுபுறக் கால்வாய் நீட்டிப்பு பயன்பெறுவோர் சங்கத் தலைவர் சிவகுரு கூறும்போது, ‘‘ கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் பல்வேறு கிராமங்களில் மாடுகளை கோமாரி நோய் தாக்கி வருகிறது. நோயால் பாதிக்கப்பட்ட பசு மாடுகள் இறந்துள்ளன. இப்பகுதியில், கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள நாகரசம்பட்டி கால்நடை மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். ஆனால் அங்கு மருத்துவர் இல்லாததால், வேலம்பட்டி கால்நடை மருத்து வனைக்குச் செல்கின்றனர்.

தற்போது பசு மாடுகளுக்கான தடுப்பூசி இல்லாததால், தனியார் கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கிறோம். எனவே, இப்பகுதியில் கால்நடை மருத்துவர்கள் தனிக் கவனம் செலுத்தி நோய் தாக்கம் உள்ள பசுமாடுகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்,’’ என்றார்.

இதுதொடர்பாக கால்நடை மருத்துவர் கணேசன் கூறும்போது, ‘‘தற்போது தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் இலவச தடுப்பூசி போட முடியாது. தேர்தல் முடிந்த பின்னர்தான் தடுப்பூசி போடப்படும். பூசாரிக்கொட்டாய் பகுதியில் ஜீரணக் கோளாறால் கன்று ஒன்று இறந்தது,’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in