

``தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அனைவரும் மனசாட்சிப் படி தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும்" என,தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் மற்றும் மகளிர் திட்டத்தின் சார்பில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிநேற்று நடைபெற்றது. பெண்கள் விழிப்புணர்வு ரங்கோலி கோலம் வரைந்தனர். வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்தும், அதனை ஒப்புகை சீட்டு மூலம் அறிந்து கொள்வது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. பெண்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து ஆட்சியர் பேசியதாவது:
வாக்காளர்கள் அனைவரும் மனசாட்சியின்படி வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும். வாக்களிப்பது நமது கடமை மட்டுமின்றி உரிமையாகும். நமக்கும் நாட்டுக்கும் நல்லது எது என்பது குறித்து, வாக்காளர்கள் சுய பரிசோதனை செய்து கொண்டு தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்பிரியா, மகளிர் திட்ட இயக்குநர் பிச்சை, துணை ஆட்சியர் (பயிற்சி) சதீஷ்குமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், புத்தாக்க திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், வட்டாட்சியர் முருகேசன், ஆத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் ரங்கசாமி, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் சாமத்துரை, மல்லிகா மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.