

ஸ்டாலின் சுயமாக செயல்படவும் சொந்தமாக முடிவெடுக்கவும் முடியாத நிலையில் உள்ளார். அவரை சுயமாக செயல்படவிடாமல் அவரது குடும்பத்தினர் தடுக்கின்றனர் என திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைய உள்ள முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி தெரிவித்தார்.
கரூரைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி. திமுக மாநில விவசாய அணி தலைவராக இருந்த அவர், கரூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
திமுக தலைவர் ஸ்டாலின், மறைந்த தலைவர் கருணாநிதி ஆகியோர் தலைமையில் கடந்த 10 ஆண்டுகளாக திமுகவில் பணியாற்றினேன்.
சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் நான் போட்டியிட வாய்ப்பு அளிக்காமல் என்னைத் தட்டிக் கழித்தனர். மக்கள் ஆதரவுள்ள எனக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதற்கு ஸ்டாலின் காரணமல்ல. அவரை சுயமாக செயல்படவிடாமல் அவரது குடும்பத்தைச் சேர்ந்தோர் தடுக்கின்றனர்.
அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு கேட்கும் போதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி தட்டிக் கழிக்கின்றனர். ஒரே ஒருமுறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. இதுகுறித்து ஸ்டாலினிடம் பேசினேன். அவர் சுயமாக செயல்படவும் சொந்தமாக முடிவெடுக்கவும் முடியாத நிலையில் உள்ளார்.
ஸ்டாலின் கடுமையான உழைப்பாளி. நன்கு பழகுக் கூடியவர். ஆனால், கருணாநிதிபோல, ஆளுமை கிடையாது. சொந்தமாக முடிவெடுக்க முடியாமல் அடுத்தவர்கள் சொல்வதை கேட்டு செயல்படும் நிலையில் உள்ளார். எனவே,திமுகவை விட்டு விலகுகிறேன்.
தாய் கழகமான அதிமுகவில் நாளை (இன்று) கரூரில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் இணைகிறேன். திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன். அதிமுகவில் முன்பு தலைவர்கள் இருந்தனர். தற்போது தொண்டர்கள் தலைவர்களாக இருக்கின்றனர் என்றார்.