

உலக சிட்டுக்குருவிகள் தினத்தையொட்டி உதகை அரசு கலைக்கல்லூரியின் தமிழ் உயராய்வுத் துறையின் சார்பில் விழிப்புணர்வு விழா கொண்டாடப்பட்டது. தமிழ்த்துறைத் தலைவர் அ.முருகேசன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ம.ஈஸ்வரமூர்த்தி முன்னிலைவகித்தார். தமிழ்துறை மாணவர்களும், பேராசிரியர்களும் எடுத்த 200 சிட்டுக்குருவிகளின் நிழற்படங்கள், சிறப்பு புகைப்படக் கண்காட்சியில் இடம்பெற்றன. பல விதமான மூலப்பொருட்களைக் கொண்டு மாணவர்கள் உருவாக்கிய சிட்டுக்குருவிகளின் 100 கூடுகளைக் கொண்டு வளாகத்தை அலங்கரித்தனர்.
‘ஆக்காட்டி’ ஆறுமுகம் என்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர் எழுதிப்பாடிய பறவைகள் குறித்த பாடலுக்கு தமிழ்த்துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட ‘கபிலம் கலைக்குழு’வின் சார்பாக உதவிப்பேராசிரியர் போ.மணிவண்ணன் பயிற்சியில் இயக்கிய வீதி நாடகத்தை மாணவர்கள் அரங்கேற்றினர்.