

சேலம் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு பணம் பட்டுவாடா மற்றும் பதுக்கலை தடுக்கும் விதமாக போலீஸார் தங்கும் விடுதிகள், பேருந்துகள், ரயில்களில் சோதனையில் ஈடுபட்டு கண்காணித்து வருகின் றனர்.
சேலம் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார் தலைமையில் சேலம் நகரப்பகுதியிலும், எஸ்பி தீபாகாணிகர் தலைமையில் மாவட்டப்பகுதியிலும் போலீஸார் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் இணைந்து கண்காணிப்பு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாநகர் மற்றும் மாவட்ட பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் வெளியூர்களில் இருந்து தங்குபவர்களின் விவரபட்டியலை தினம் அந்தந்த காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பெற்று போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.
மேலும், தங்கும் விடுதிகளில் போலீஸார் இரவு நேரங்களில் திடீர் சோதனை நடத்தி வரு கின்றனர்.
இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, “தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, பரிசுப் பொருட்கள் வழங்குவது சட்டப்படி குற்றம். தேர்தல் விதிமீறி வாக்காளர்களுக்கு பணம், பொருள் கொடுத்தால், அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவோ, பணம் பதுக்கி வைத்து தேர்தலின்போது விநியோகம் செய்வதை தடுக்க தங்கும் விடுதி, பேருந்து ரயில்கள், சோதனைச் சாவடிகளில் போலீஸார் ரோந்து முறையில் கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றனர்.