

தேயிலை வாரியம் நிர்ணயிக்கும் விலையை அமல்படுத்தக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் உதகை சட்டப்பேரவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் மு.போஜராஜன் என்று உதகையில் ஆ.ராசா குற்றம்சாட்டினார்.
நீலகிரி மாவட்டம் உதகை சட்டப்பேரவைத் தொகுதி திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷை ஆதரித்து, காபி ஹவுஸ் சதுக்கத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசும்போது ‘‘உதகை சட்டப்பேரவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் மு.போஜராஜன், தேயிலை விவசாயிகள் நலனுக்காக தேயிலை வாரியம் நிர்ணயிக்கும் விலையை, தொழிற்சாலைகள் வழங்க நிர்பந்திக்கக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர். விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளார்.
எனவே, உதகை மக்கள், காங்கிரஸ் வேட்பாளர் கணேஷை வெற்றிபெறச் செய்யவேண்டும். இவர் வெற்றிபெற்று மக்களின் கோரிக்கைகளை ஒருவேளை நிறைவேற்றாதபட்சத்தில் நீலகிரி எம்.பி. என்ற முறையில் நான், உங்கள் கோரிக்கைகளை திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேசி நிறைவேற்றுவேன்’’ என்றார்.