

ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் கொட்டச்சேடு- மேணங்குழிகாடு வரையிலான இணைப்பு மண் சாலையை, தார் சாலையாக மாற்ற வலியுறுத்தி, 18 மலைக் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக சுவரொட்டி மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
சேலம் ஆட்சியர் அலுவலக வளாக சுற்றுச்சுவர்களில் 18 கிராம மக்கள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில் கூறியிருப்பதாவது:
ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட மாரமங்கலம் பஞ்சாயத்தில், கொட்டச்சேடு முதல் மேணங்குழிகாடு 6 நெம்பர் பீல்டு வரை உள்ள இணைப்பு மண் சாலையை தார்சாலையாக மாற்ற வேண்டும். அதுவரை தேர்தல் புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும்.
சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி சாலை அமைப்பதை தடுக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாரமங்கலம் பஞ்சாயத்தில் உள்ள கொட்டச்சேடு, செந்திட்டு, காளிக்காடு, அரங்கம், சின்னமதூர், பெரியமதூர், பெலாக்காடு, கேலையூர், மாவூத்து, குட்டமாத்திக்காடு, சுண்டகாடு, கோரிக்கல், வசம்பேரிகாடு, சின்னேரிகாடு, மலையன்காடு, மாரமங்கலம், கொம்புதூக்கி, தால்கோயிலூர், கோவிலூர், மத்திரிகாடு, கூத்துமுத்தல் ஆகிய கிராம மக்கள் என குறிப்பிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் கேட்டபோது, “இதுதொடர்பாக மலைக் கிராம மக்களிடம் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மக்களின் கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.