

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, சேலம் அண்ணா பூங்காவில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாநகர பகுதிகளில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சுகாதார அலுவலர்கள் தலைமையில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் தனிநபர் மற்றும் வணிக நிறுவனங்களின்மீது அபராதம் விதிக்கப்படுவதுடன், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
சேலம் அண்ணா பூங்காவில் அனைத்து நாட்களிலும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்கள் அதிகளவில் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர்.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். பூங்காவுக்கு வரும் பொதுமக்கள், முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும்.
பூங்காவில் அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.