

திருச்சியில் நேற்று ஆல் இந்தியா ரயில்வே ஆக்ட் அப்ரண்டீஸ் அசோசியேஷன் ஒருங்கிணைப்பாளர் த.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியது:
பொன்மலை ரயில்வே பணிமனையில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு 90 சதவீதம் பேர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டபோது, அதை எதிர்த்து போராட்டம் நடத்திய எங்களுக்கு திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி பக்கபலமாக இருந்தார். அதன் தொடர்ச்சியாக தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சியில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல, கரோனா காலத்தில் பொன்மலை ரயில்வே பணிமனையில் வடமாநிலத்தவர் அதிகளவில் பணியமர்த்தப்பட்டபோது அதை எதிர்த்து நாங்கள் நடத்திய போராட்டத்திலும் அவர் உறுதுணையாக இருந்தார்.
ரயில்வேயில் நாங்கள் பணி வாய்ப்பு பெறவும், வடமாநிலத்தவர் ஆதிக்கத்தை குறைத்து மண்ணின் மைந்தர்களுக்கு வேலையில் முன்னுரிமை வழங்கவும் திமுக உறுதியளித்ததுடன், 75 சதவீத வேலைவாய்ப்பு மண்ணின் மைந்தர்களுக்கு வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையிலும் வெளியிட்டுள்ளனர்.
எனவே, ரயில்வேயில் அப்ரண்டிஸ் முடித்த அனைவரும், அவர்களது குடும்பத்தினரும் இந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணியை ஆதரிக்க உள்ளோம் என்றார்.