

தூத்துக்குடியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு கைப்பந்து போட்டி நடைபெற்றது.
தருவை மைதான உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து நடத்திய இப்போட்டியை மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்து, வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு வழங்கினார்.
மேலும், ‘100 சதவீதம் வாக்களிப்போம்’ என்ற கையெழுத்து இயக்கத்தையும் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார்.
பின்னர் ஆட்சியர் பேசும்போது, ‘‘தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு 889 மையங்களில் 2,097 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில்
மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, சாய்தள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தேர்தல் ஆணையம் வாக்குச் சாவடிக்கு வர இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு முறையை செயல்படுத்தியுள்ளது. மேலும் மாற்றுத்திறானிகளுக்கு உதவிடும் வகையில் பிடபிள்யூடி என்ற தனி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் அதை பதிவிறக்கம் செய்து, அந்த செயலியின் மூலம் ஓட்டு போடும் நேரத்தை அதில் தெரிவித்தால், அந்த தகவலானது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை சென்றடையும். அவர்கள் அதற்கு ஏற்றார்போல் தேவையான முன்னேற்பாடுகள் செய்து வைப்பார்கள். மாற்றுத்திறனாளிகள் அனைவரும் சட்டப்பேரவை தேர்தலில் தவறாது வாக்களிக்க வேண்டும்’’ என்றார்.
நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் (பயிற்சி) சதீஸ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பேட்ரிக், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம். உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ரா.ராமசுப்பிரமணியன், தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் துரைப்பாண்டி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.