

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்குவதற்காக வரப்பெற்றுள்ள கரோனா நோய் தொற்று பாதுகாப்பு உபகரணங்களை, நீலகிரி ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கரோனா நோய் தொற்று காரணத்தால், 868 வாக்குச்சாவடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன.வாக்குச்சாவடிகள் மற்றும் துணை வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க தேவையான அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. மேலும், தேர்தல் பணி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கரோனாதடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாளில்911 உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யும் கருவி (தெர்மா மீட்டர்), கை சுத்தம் செய்வதற்காக 6,000 கிருமி நாசினி (500 மி.லி), 7,03,300 கையுறைகள், 11,712 பிபிஇ கிட் மற்றும் 26,040 முகக்கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வரப்பெற்றுள்ளன. இவை அனைத்தும் பாதுகாப்பாக கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு முன்பாக அந்தந்தசட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வாக்குச்சாவடிக்கு தலா ஒரு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யும் கருவி (தெர்மாமீட்டர்), சானிடைசர் 500 மி.லி. 7 பாட்டில்கள் மற்றும் 100 மி.லி. 11 பாட்டில்களும், 1,200 கையுறைகள் மற்றும் முகக்கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.