நீலகிரி மாவட்டத்தில் கடந்த தேர்தலில் அதிக அளவில் - பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டபகுதிகளில் தீவிரமாக கண்காணிக்க உத்தரவு :

நீலகிரி மாவட்டத்தில் கடந்த தேர்தலில் அதிக அளவில் -  பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டபகுதிகளில் தீவிரமாக கண்காணிக்க உத்தரவு :
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்தில் கடந்த தேர்தலில் எந்தெந்த இடங்களில் அதிகமாக பணம் அல்லது பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோ, அந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டுமென சிறப்பு செலவின பார்வையாளர் மதுமகஜன் தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தால் நீலகிரி மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட சிறப்பு செலவின பார்வையாளர் மதுமகஜன் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் செலவின கண்காணிப்புக் குழு அலுவலர்களுடன் உதகையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அவர் பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்திலுள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 3 பொது பார்வையாளர்களும், 2 தேர்தல் செலவின பார்வையாளர்களும், காவல்துறை பார்வையாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை, பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு மூலம் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் எவ்வளவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், தேர்தல் தொடர்பான கண்காணிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, கடந்த தேர்தலின்போது எந்தெந்த இடங்களில் அதிகமாக பணம் அல்லது பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோ, அந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், மூன்று மாநிலங்களின் எல்லையோரமாக நீலகிரி மாவட்டம் அமைந்திருப்பதால், குழுக்கள் அமைத்து மதுபானங்கள் ஏதும் கொண்டு வரப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்" என்றார்.

மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா, தேர்தல் பொது பார்வையாளர்கள் ராகுல் திவாரி, பனுதர் பெஹரா, சவ்ரவ் பஹரி, தேர்தல் செலவின பார்வையாளர்கள் விஷால் எம்.சனாப், அமர் சிங் நெஹரா, காவல்துறை பார்வையாளர் ரஞ்சித் குமார் மிஸ்ரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பாண்டியராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in