ஈரோட்டில் இதுவரை 4.14 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை : எண்ணிக்கையை அதிகரிக்க சுகாதாரத்துறை நடவடிக்கை

ஈரோட்டில் இதுவரை 4.14 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை :  எண்ணிக்கையை அதிகரிக்க சுகாதாரத்துறை நடவடிக்கை
Updated on
1 min read

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4.14 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ள நிலையில், கரோனா பரவலைக் கண்டறியும் வகையில், தற்போது நாள்தோறும் சராசரியாக 2000 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவலைக் கண்டறியும் வகையில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை இணைந்து தொடர்ந்து பரிசோதனைகளை நடத்தி வருகிறது. கரோனா அறி குறிகளைக் குறிப்பிட்டு துண்டு பிரசுரங்கள், ஒலிப்பெருக்கிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு, அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் பரவலாக கரோனா பரவல் அதிகரித்து வருவதால், பரிசோதனையின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈரோடு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 14 ஆயிரத்து 663 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது பரவல் அதிகரிப்பதாக தகவல் கிடைத்துள்ளதால், நாள்தோறும் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது மேற்கொள்ளப்பட்டதைப்போல், சராசரியாக நாள்தோறும் 2000பரிசோதனைகள் மேற்கொள்ளப் படுகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அபராதம் விதிப்பு அதிகரிப்பு

இதுதொடர்பாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறும்போது, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், நகரப் பகுதியில் 99 சதவீதம் பேர் முகக்கவசம் அணியத் தொடங்கியுள்ளனர். முகக்கவசம் அணிய வேண்டியதின் அவசியம் குறித்த விழிப்புணர்வையும் மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது, என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in