திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்குப்பதிவின்போது - வாக்காளர்களுக்கு வழங்க 22 லட்சம் கையுறைகள் : கரோனா தடுப்பு நடவடிக்கையாக வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவு

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்குப்பதிவின்போது    -  வாக்காளர்களுக்கு வழங்க 22 லட்சம் கையுறைகள்   :  கரோனா தடுப்பு நடவடிக்கையாக வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவு
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கையாக 22 லட்சம் கையுறைகள், 48 ஆயிரம் சானிடைசர் பாட்டில்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இவை தேர்தல் அன்று வாக்காளர்களுக்காக பயன்படுத்தப்பட உள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், நத்தம், நிலக்கோட்டை, ஆத்தூர் என ஏழு தொகுதிகள் உள்ளன. இவற்றில் பழநி தொகுதியில் 405, ஒட்டன்சத்திரம் தொகுதியில் 352, ஆத்தூர் 407, நிலக்கோட்டை 342, நத்தம் 402, திண்டுக்கல் தொகுதியில் 397, வேடசந்தூர் தொகுதியில் 368 ஆகிய வாக்குச்சாவடிகள் என மொத்தம் திண்டுக்கல் மாவட்டத்தில் 2,673 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் நாளான ஏப்ரல் 6 ம் தேதி அன்று வாக்குச்சாவடிகளில் 25 ஆயிரத் திற்கும் மேற்பட்ட பணியாள்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்குப்பதிவு செய்யவும், மாற்றுத்திறனாளிகள் செல் வதற்கு ஏதுவாக சாய்தள நடைமேடை வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி, தளவாட சாமான்கள், இணையதள வசதி ஆகியவை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்பாக வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கையாக வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்வதற்கு போதிய பணியாளர்களை நியமிக்கவும், மாற்றுத் திறனாளிகளை அழைத்துச் செல்ல தேவையான தன்னார்வலர்களை நியமிக்கவும் அந்தந்த பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அலுவலர்களுக்கு முகக்கவசம், சானிடைசர், முழு உடல்கவசம் உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு கரோனா தடுப்பு உபகரணங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. வாக்களிக்க வரும் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்யும்போது கையுறை அணிந்து வாக்கை செலுத்த ஏதுவாக கையுறை வழங்கப்படவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் உள்ள வாக்கா ளர்கள் கையுறை அணிந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்ய ஏதுவாக 22 லட்சம் கையுறைகள், இதேபோல் 48 ஆயிரம் சானிடைசர் பாட்டில்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதையடுத்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in