

தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் தொகுதியில் ஜல்லிக்கட்டு காளையுடன் வந்து சுயேச்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
வைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கத்தினர் தொடர்ந்து 4 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதனைதொடர்ந்து கடந்த ஆண்டு வைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசுசார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யும்பணி மாவட்ட நிர்வாகம் சார்பில்நடைபெற்றது. ஆனால், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படவில்லை.
இந்நிலையில் வைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என வலியுறுத்தும் விதமாக ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வைகுண்டம் சட்டப்பேரவை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் மலையாண்டி நேற்று ஜல்லிக்கட்டு காளையுடன் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தார்.
100 மீட்டருக்கு முன்னால் காளையை போலீஸார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து மலையாண்டி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜீவரேகாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது உடனிருந்த ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர் ராஜா கூறும்போது, ‘‘ துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முயற்சியால் வைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தாமல் கிடப்பில் போடப்பட்டது. எனவே, ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சுயேச்சை வேட்பாளரை வைகுண்டம் தொகுதியில் நிறுத்தியுள்ளோம்’’ என்றார்.