மீனவர்களை பாதுகாக்க நெய்தல் படை அமைக்கப்படும் : தூத்துக்குடி பிரச்சாரத்தில் சீமான் உறுதி
தூத்துக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேல்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமான், குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு பகுதியில் திறந்த வேனில் நின்று பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:
அரை நூற்றாண்டுகளாக திமுக,அதிமுக கட்சியில் நம் நிலத்தின்வளத்தை எல்லாம் கொள்ளையடித்துக் கொண்டு சென்றுவிட்டனர். ஆற்று மணலை அள்ளி பிறமாநிலங்களுக்கு அனுப்பி பல ஆயிரம் கோடி சம்பாதித்து ஆற்றைசாகடித்து விட்டார்கள். உலகிலேயே சிறந்த வடிகட்டியும், நீர்தேக்கியும் மணல் தான். மணலை அள்ளிவிட்டால் ஆறு இறந்து விடும் 32 ஆறுகள் மரணித்து விட்டன.
மீத்தேன் எடுப்பதாக நிலத்தின்வளத்தை கெடுத்து விட்டார்கள். தற்போது எம்.சேண்ட் என்று மலையை நொறுக்குகிறார்கள்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்து திறந்து வைத்தவர்கள், பின்னர் அதனை எதிர்க்கிறோம் என்கிறார்கள். தாமிர தட்டுப்பாட்டை பற்றி பேசுகிறார்கள். ஆனால், தண்ணீர் தட்டுப்பாட்டை பற்றி பேசுவது இல்லை.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மனு கொடுக்க சென்ற போது சுட்டுக் கொன்றது கொடுமை. செம்மரம் வெட்ட வந்தார்கள் என்று ஆந்திர அரசும், எல்லை தாண்டினார்கள் என்று இலங்கை அரசும் தமிழர்களை சுட்டுக் கொல்கிறது. இதனை எந்தக் கட்சியும் கண்டிக்கவில்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நெய்தல் படை உருவாக்குவோம். அதில் மீனவர்களை மட்டுமே சேர்ப்போம். மீனவர்களை தாக்க வந்தால், திருப்பித் தாக்குவோம்.
கல்வி, மருத்துவம், குடிநீர்ஆகிய மூன்றை மட்டும்தான்இலவசமாக கொடுப்போம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின்சாரம் தயாரிக்கப்படும். எல்லா வற்றையும் மாற்ற நினைக்கும் எங்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.
