பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலமான - திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் சசிகலா சிறப்பு பூஜை :

கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் நேற்று வழிபட்ட பின்னர், உறவினர்களுடன் கோயில் பிரகாரத்தில் வலம் வரும் சசிகலா.
கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் நேற்று வழிபட்ட பின்னர், உறவினர்களுடன் கோயில் பிரகாரத்தில் வலம் வரும் சசிகலா.
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்அருகே உள்ள திருவிடைமருதூரில் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலமான மகாலிங்க சுவாமி கோயிலில் சசிகலா நேற்று சிறப்பு பூஜை செய்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக் காலம் நிறைவடைந்து, சிறையில் இருந்து விடுதலையான ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா சென்னையில் தங்கியிருந்தார். முன்னதாக, பெங்களூருவிலிருந்து வந்ததும் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்த அவர், பின்னர் சில நாட்களிலேயே திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், சென்னையிலிருந்து நேற்று முன்தினம் மாலை புறப்பட்டு, நள்ளிரவில் தஞ்சாவூருக்கு சசிகலா வந்தார். தஞ்சாவூர் அருளானந்தம்மாள் நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கிய அவர், நேற்று காலை தனது கணவரின் சொந்த ஊரான விளார் கிராமத்துக்குச் சென்றார்.

அங்கு, நடராஜனின் சகோதரர் பழனிவேலுவின் பேரக்குழந்தைகளுக்கு, அவர்களின் குலதெய்வ கோயிலான வீரனார் கோயிலில் நடைபெற்ற காதுகுத்து விழாவில் பங்கேற்றுவிட்டு, வீரனாரை தரிசனம் செய்த பின்னர்,சில நிமிடங்கள் மட்டும் உறவினர்களுடன் பேசிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

தொடர்ந்து, கும்பகோணம்அருகேயுள்ள திருவிடைமருதூரில், 27 நட்சத்திர லிங்கங்களுக்கு சன்னதி கொண்ட ஒரே தலமாகவும், பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலமாகவும் விளங்கி வரும்மகாலிங்க சுவாமி கோயிலுக்கு சசிகலா சென்றார். அங்குள்ள 27 நட்சத்திர லிங்க சன்னதிக்குள் சென்று, ரேவதி நட்சத்திர லிங்கத்துக்கு சிறப்பு பூஜைசெய்து வழிபட்டார்.

தொடர்ந்து, மகாலிங்கசுவாமி, சுந்தரகுஜாம்பாள், மூகாம்பிகை அம்பாள் சன்னதிக்கு சென்று வழிபட்டார். 1 மணிநேரம் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, வெளியே வந்த அவர், அங்கிருந்த பொதுமக்களுக்கு உணவுப்பொட்டலங்களையம், குடைகளையும் வழங்கினார்.

அப்போது, அவரிடம் செய்தி யாளர்கள் பேட்டியெடுக்க முயன்றபோது, “கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய மட்டுமே வந்தேன்” எனக் கூறிவிட்டு காரில் ஏறிச் சென்றார்.

சசிகலாவின் கணவர் நடராஜனின் 3-ம் ஆண்டு நினைவு தினம், விளாரில் உள்ள அவரது சமாதியில் நாளை (மார்ச் 20) அனுசரிக்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் சசிகலா பங்கேற்றுவிட்டு, பின்னர் சென்னைக்கு திரும்ப உள்ளார். இதற்காக, தஞ்சாவூரில் 3 நாட்கள் தங்கியிருக்கும் சசிகலா, பல்வேறு கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்யவும், அரசியல் பிரமுகர்களை தனிப்பட்ட முறையில் சந்திக்கவும் உள்ளதாக சசிகலாவின் உறவினர் வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in