திருவாரூர் மாவட்டத்தில் நெல்வரத்து இல்லாததால் - 228 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட உத்தரவு : தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடவடிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் நெல்வரத்து இல்லாததால் -  228 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட உத்தரவு :  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடவடிக்கை
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டத்தில் நெல் வரத்து இல்லாததால், 228 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உத்தர விட்டுள்ளது.

இதுதொடர்பாக, திருவாரூர் முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக திருவாரூர் மண்டலத்தில் 2020-21-ம் ஆண்டு பருவத்துக்கு 485 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சம்பா அறுவடைப் பணிகள் நிறைவடைந்து, கொள்முதல் பணியும் நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக, திருவாரூர் மாவட்டம் முழுவதும் நெல் வரத்து இல்லாத 228 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இதன்படி, திருவாரூர் 21, நன்னிலம் 12, குடவாசல் 23, வலங்கைமான் 21, மன்னார்குடி 73, நீடாமங்கலம் 31, கூத்தாநல்லூர் 27, திருத்துறைப்பூண்டி 20 என 228 நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படவேண்டும்.

மூடப்படவுள்ள நெல்கொள்முதல் நிலையத்தில் உள்ள கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மற்றும் கொள்முதல் பணிக்கான தளவாடப் பொருட்கள் அனைத்தையும் மண்டல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in