

தமிழகத்தில் சிறப்பான நீர் மேலாண்மையை கொண்டு வருவதே எனது லட்சியம் என தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் பாஜக வேட்பாளர் பூண்டிஎஸ்.வெங்கடேசன், பாபநாசத்தில் அதிமுக வேட்பாளர் கோபிநாதன், கும்பகோணத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழகத் தலைவர் தர்வாண்டையார், திருவிடைமருதூரில் அதிமுக வேட்பாளர் வீரமணி ஆகியோரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: திருவையாறு பகுதியில் விவசாயிகளின் நலனுக்காக கல்லணைக் கால்வாயை ரூ.290 கோடியில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. டெல்டா விவசாயிகள் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் தங்களுடைய நிலங்கள் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர்.
எனவே, இந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்து, விவசாயிகளின் அச்சத்தைப் போக்கி உள்ளோம். இந்தியாவிலேயே பயிர்காப்பீட்டு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு அதிக இழப்பீட்டை பெற்றுத் தந்த ஒரே அரசு அதிமுக அரசுதான்.
50 ஆண்டுகளாக போதிய தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு, கர்நாடகாவிடம் போராடி தண்ணீரைப் பெற்று விவசாயம் செய்து வந்தோம். இதற்கான சட்டப் போராட்டங்களை நடத்தி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணப்படி அதிமுக அரசு தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளது.
காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு இணைப்புதிட்டம் தொடங்கி வைக்கப்பட்டுஉள்ளது. அதுபோல, காவிரி - கோதாவரி திட்டமும் வெற்றி பெறும். விவசாயியான நான் ஆந்திரா, தெலங்கானா முதல்வர்களை தொடர்புகொண்டு, இந்த திட்டத்துக்கு உரிய தண்ணீரைக் கேட்டதுடன், இந்த திட்டத்தை நிறைவேற்ற ரூ.80 ஆயிரம் கோடி செலவாகும் என பிரதமரிடம் கேட்டபோது, அதற்கான நிதியைதருகிறேன் என அவர் உறுதிமொழி அளித்துள்ளார். தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்திசெய்யும் வகையில் சிறப்பான நீர் மேலாண்மையை கொண்டுவருவதே எனது லட்சியம்.
தவறு இருந்தால் கேட்கட்டும்
அரசு பணத்தை நாங்கள் வீணாக்குவதாக கூறி வருகிறார். அரசு திட்டங்களை மக்கள் தெரிந்துகொள்வதற்காகத்தான் இதுபோன்ற விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் ஸ்டாலின் கேட்கட்டும். அதற்கு நாங்கள் பதில் சொல்கிறோம் என்றார்.