

கரோனா நோய் தொற்று பரவி வரும் காரணத்தால் அனைவரும் பாதுகாப்பு நலன் கருதி கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா வைரஸ் நோய் தொற்று பரவி வரும் காரணத் தால் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அதன்படி, பொதுமக்கள் வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள்,ரயில் நிலையங்கள், காய்கறி அங்காடிகள், பல்பொருள் அங்காடிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து பொது இடங்களுக்கு வரும் போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். மேலும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். எனவே, மேற்கண்ட நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாமல், பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் இருத்தல் அல்லது சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் இருத்தல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது அபராதம் மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.