தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில நிர்வாக குழுக் கூட்டத்தில் பேசுகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்.
தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில நிர்வாக குழுக் கூட்டத்தில் பேசுகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஏட்டிக்குப் போட்டியாக உள்ளது : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கருத்து

Published on

அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஏட்டிக்குப் போட்டியாக உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற இளைஞர் பெருமன்ற நிர்வாக குழுக் கூட்டத்தில் பங்கேற்க வந்தஅவர், செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழக முதல்வரின் பேச்சு, அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஆகியவை ஏட்டிக்குப் போட்டியாக இருக்கிறது. அதிமுகவின் தேர்தல் அறிக்கை, உண்மையில் மக்கள்சேவையை நோக்கமாக கொண்டிருக்கவில்லை. விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அதைஎதிர்த்து அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், விவசாயக் கடனை தள்ளுபடி செய்யும் என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்த பிறகு, அதிமுக அரசு கடன் தள்ளுபடியை அறிவித்தது.

ஜெயலலிதா மரணத்துக்கு கருணாநிதி, ஸ்டாலின்தான் காரணம் என முதல்வர் உண்மைக்குப் புறம்பாகப் பேசி வருகிறார். முதல்வர் தனது பொறுப்புக்கேற்ப விமர்சனங்களையும், கருத்துகளையும் தெரிவிக்க வேண்டும்.

பாஜக ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத கட்சி. மாநிலத்தில் வேறு எந்தக் கட்சியும் இருக்கக்கூடாது என அக்கட்சி வெளிப்படையாகவே செயல்படுகிறது. முன்பு 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி மாநில அரசுகளை கலைப்பார்கள், ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்க்கும் வேலையை பாஜக செய்கிறது.

வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து வாக்குகளை விலைக்குவாங்கிவிடலாம் என அதிமுகவினர் பகல் கனவு காண்கின்றனர். பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் 50 சதவீதம் இடஒதுக்கீடு செய்ய பாஜக முன் வந்தால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமனதோடு வரவேற்கும் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in