சுவர்களில் நோட்டீஸ் ஒட்டினால் நடவடிக்கை கோவை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை :

கோவை சாய்பாபா காலனி கே.கே.புதூர் பகுதியில் நடைபெற்ற தூய்மைப் பணிகளை நேற்று ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன்.
கோவை சாய்பாபா காலனி கே.கே.புதூர் பகுதியில் நடைபெற்ற தூய்மைப் பணிகளை நேற்று ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன்.
Updated on
1 min read

மாநகராட்சி மேற்கு மண்டலப் பகுதிகளில் நடைபெற்று வரும் சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிகளை மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். சாய்பாபா காலனி 6-வது தெரு, மணியம் வேலப்பர் வீதி, அம்மாசை வீதி, மணியம் மருதுகுட்டி தெரு, கே.கே.புதூர், சின்னப்பன் வீதி, கோ-ஆபரேட்டிவ் காலனி, கலெக்டர் சிவக்குமார் வீதி ஆகிய பகுதிகளில், மழைநீர் வடிகால்வாய்களில் நீர் செல்லும் பாதையில் உள்ள அடைப்புகளை அகற்றும் பணி, கொசு மருந்து தெளிக்கும் பணி மற்றும் சாக்கடைக் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்த ஆணையர், அப்பகுதி மக்களிடம் குடிநீர் விநியோகம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறும்போது, "பொதுமக்கள் சாலையோரங்களிலும், மழைநீர் வடிகால்வாய்களிலும் குப்பை கொட்டக் கூடாது. மக்கும் மற்றும் மக்கா குப்பையை தரம் பிரித்து, தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சுவர்களில் நோட்டீஸ், போஸ்டர்கள், துண்டுப் பிரசுரங்களை ஓட்டவோ, சுவர்களில் வாசகங்கள் எழுதவோ கூடாது. இதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். ஆய்வின்போது, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், செயற் பொறியாளர் (ஸ்மார்ட் சிட்டி) சரவணகுமார், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in