

திருச்சி: தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் டெபாசிட் தொகையைக்கூட பெற முடியாத அளவுக்கு பாஜகவை மக்கள் ஒன்றிணைந்து தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் பொழிலன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக மக்கள் முன்னணி மற்றும் 15 இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் பொழிலன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:
தமிழர்கள் மீதும், மொழிவாரி மாநிலங்களின் மீதும் பல்வேறு அடக்குமுறைகளை பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழர்களின் தனித்த அடையாளங்களை, மரபுகளை, வரலாற்றை அழித்து வருகிறது.
எனவே, பாஜகவை எதிர்த்து தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும். இந்தத் தேர்தலில் டெபாசிட் தொகையைக் கூட திரும்பப் பெற முடியாத அளவுக்கு பாஜகவை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும். அதனுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவையும் தோற்கடிக்க வேண்டும். இதற்காக தமிழக மக்கள் முன்னணியுடன் இணைந்த 15 இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் செய்யவுள்ளோம் என்றார்.